பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதைக் கண்டித்து மிகப்பெரிய மொழி உரிமை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக புதுச்சேரி அமைப்பாளர் சிவா அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதை, இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ-யின் கீழ் வரும் பள்ளிகள் அனைத்தும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய மொழிக் கொள்கை தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ளது. அதில், பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு மாணவர்களிடையே மொழித் திறன், கலாசார புரிதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு உள்ளூர் இந்திய மொழிகளைக் கற்பிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026-27 கல்வி ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதாகவும், 3 மொழிகளில் இரு மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் 7 நாட்களுக்குள் 3வது இந்திய மொழி கற்பிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த உத்தரவு, புதுச்சேரி மாணவர்களிடையே குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டன இந்நிலையில் புதுச்சேரியில் மும்மொழி கொள்கையால் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, “மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக புதுச்சேரி அமைப்பாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு பிராந்திய மொழிகள் படிக்கலாம் என்று சொல்லி, ஆங்கிலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு பாடம் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கற்றல் முறை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த தன்னிச்சையான முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிவா வலியுறுத்தியுள்ளார்.

More Stories
மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் 1 லட்சத்தை கடந்தது: தமிழக அரசு அறிவிப்பு…
ரூ.12.60 கோடி கடன் கொடுத்தாரா விஜய்…? நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க உதவி எண் அறிமுகம்…