உத்தரபிரதேச மாநிலம் பைரோஜா பாத் பகுதியைச் சேர்ந்தவர் நரேசிங். இவரது குடும்பத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராகவேந்திரா காலனி பகுதியில் தங்கி வளையல் வியாபாரம் செய்து வந்தனர். நரேசிங் மகள் கோவிந்தப்பிரியா(21). இவர், ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது, ஓசூர் வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த சூர்யா(26) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், நரேசிங் மரணமடைந்தார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோயிலில் வைத்து கோவிந்தப்பிரியா -சூர்யா ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இதனால் கோவிந்தப்பிரியாவின் தாய் சகுந்தலா(55) மற்றும் சகோதரர்கள் கடந்த 13ம் தேதி வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊர் சென்றனர்.
பின்னர் கர்நாடக மாநிலம் வந்து, அங்குள்ள கார் டிரைவர் ரத்தோட் துணையுடன் நேற்று பிற்பகல் ஒரு காரில் ஓசூர் வெங்கடேஷ் நகர் சென்றனர். அதிரடியாக சூர்யா வீட்டிற்குள் நுழைந்து பெப்பர் ஸ்பிரே அடித்து கோவிந்தப்பிரியாவை தூக்கிச்சென்று காரில் கடத்திச்சென்றனர். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் சூர்யா புகார் தெரிவித்தார். போலீசார் செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் உதவியுடன் பின்தொடர்ந்து கர்நாடக மாநிலம் தொட்ட ஆல்த்மரா ரோடு, ராமோஅள்ளி பகுதியில் மறைந்திருந்த கும்பலை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, கோவிந்தப்பிரியாவின் தாய் சகுந்தலா, சகோதரர்கள் பிண்டுகுமார் நாயக்(24), ஆகாஷ்(19) மற்றும் கார் டிரைவர் ரத்தோட்(27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கோவிந்தப்பிரியாவை மீட்டனர்.

More Stories
இளம்பெண்ணுக்கு மொட்டையடித்து கொடுமை: பெற்றோர் மீது பரபரப்பு புகார்…
காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது: தமிழ்நாடு டிஜிபி உத்தரவு!
விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு தொடக்கம்!