April 27, 2026

ஓசூரில் உதவி செய்வது போல் நடித்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண் ஒருவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வேலை தேடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தற்காலிகமாக தங்கி பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர், அப்பெண் தன்னுடன் தங்கியுள்ளவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவரிடம் போன் இல்லாததால், பேகேப்பள்ளி மகாலட்சுமி லே-அவுட்டைச் சேர்ந்த பால் வியாபாரி மகேஷ் (37) என்பவரிடம் போன் கேட்டுள்ளார்.

அப்போது, யாருக்கு போன் செய்ய வேண்டும் என்று விசாரித்த மகேஷ், அப்பெண்ணை அவர்களிடம் தானே நேரில் அழைத்துச் சென்று விடுவதாக கூறி டூவீலரில் ஏற்றிச் சென்றார். மகேஷை நம்பி உடன் சென்ற அப்பெண்ணை, அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் லே-அவுட் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு மகேஷ் கடத்திச் சென்றார்.

பின்னர், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். பாதிக்கப்பட்ட பெண், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். இதன் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மகேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.