April 21, 2026

மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்… 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பணிகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேவையான சிறப்பு வசதிகளை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது. 

அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம் (ரேம்ப்), சக்கர நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடிகளுக்கு நேரில் வர முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்காக படிவம் 12D மூலம் அஞ்சல் வாக்கு செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வீட்டிலிருந்தே தங்களின் வாக்குரிமையை பயன்படுத்த முடியும்.

தேர்தல் நாளான 23-ந் தேதி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் எளிதாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியும்.இதற்கு மேலாக, வாகன வசதி தேவைப்படுவோர் 1950 உதவி மைய எண்ணில் அல்லது ‘சக்ஷம்’ செயலி மூலம் பதிவு செய்தால், அவர்களுக்கு தனிப்பட்ட வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்படும்.இந்த வசதிகளை பயன்படுத்தி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.