எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆகிவிடக் கூடாது என்பதற்காக தான், நான் திமுகவில் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவீந்திரநாத் விருப்பமனு அளித்துள்ளார்

இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் திமுக நிர்வாகிகள் மத்தியில் கூட்டம் ஒன்றில் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக-வில் உண்மையாக உழைத்தேன். விசுவாசம் என்ற பெயருக்கு பெயர் பெற்று பாடுபட்டேன். அம்மா மறைவுக்கு பின்பு கட்சியை சிதறவிடாமல் வழிநடத்தினேன்.

ஏமாற்றி எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி ஆதரவு கோரிய நிலையில் அம்மா வகித்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதால் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால் ஆட்சி முடிந்த பிறகு பொதுச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டு அதில் தன்னை எடப்பாடி பழனிசாமி அமர்த்தி கொண்டார். இது பெரும்பாலானோருக்கு பிடிக்காததால் எதிர்த்து குரல் கொடுத்த அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.” என்று ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார்.

ஏன் திமுகவில் இணைந்தேன்..?

அ.தி.மு.க பிளவு படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தும் என்னை இயக்கத்தில் சேர்க்க மறுத்து விட்டார். என்னைப்போல பலரும் அங்கிருந்து வெளியேறி தாய்க்கழகமான திமுக-வில் இணைய முடிவு செய்தோம்.

முதல்வர் முக.ஸ்டாலின் அனைவரையும் தாய் உள்ளத்துடன் ஏற்றுக்கொண்டார். இனி எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் திமுகவில் இணைந்தேன்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.