கோவையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை ஆயுதப்படை பிரிவில் நடந்த இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தின் பின்னணி

​கோவைப்புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை 4-வது அணியில் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தவர் செந்தில்குமார். இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் காவலர்களுக்குப் பல்வேறு வகைகளில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகப் புகார்கள் எழுந்தன.

புகார்:

பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள், செந்தில்குமார் தங்களுக்குப் பணி ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பாலியல் ரீதியான நெருக்கடிகளைத் தருவதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவலர் பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

பணியிடை நீக்கம்:-

இதனைத் தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கை:

இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவலர்கள் எஸ்.பி. செந்தில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடவடிக்கையின் தாக்கம்

​இந்தச் சம்பவம் வெளியானதும், காவல் துறையிலேயே பெண் காவலர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், உயர் அதிகாரி என்றும் பாராமல் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தது, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு என்பதை உணர்த்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.