மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயைப் பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் காட்டும் மெத்தனப் போக்கு, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டச் சரிவு மற்றும் விவசாயப் பாசன பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்தும், ஒரு தனியார் நிறுவனத்தின் லாபத்திற்காக நீர்நிலை பலிகடா ஆக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதிர்ச்சி தரும் ‘பாலம்’ – அதிகாரப்பூர்வமற்றக் கூட்டணி?
திரளி கண்மாயில் மண் எடுக்கும் ALR Construction நிறுவனத்திற்கும், மதுரை கனிமவளத்துறைக்கும் இடையே ‘பாலமாக’ ஒருவர் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்கள் மத்தியில் பரவலான பேச்சு எழுந்துள்ளது.
தமிழ் தேசியத்திற்காகப் போராடிய ஒரு தலைவரின் பெயரைக் கொண்ட நபர் ஒருவர், இந்த விதிமீறல் புகார்களை மூடி மறைக்க அதிகாரிகளுடன் கைகோர்த்துச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த நபருக்குச் சொந்தமாக, ‘காலத்தை நிர்ணயிக்கும்’ பெயரைக் கொண்ட குவாரி ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அரசியலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று வெளியே சொல்லிக்கொண்டாலும், ‘தொழில்’ என்று வரும்போது அனைவரும் பாகுபாடின்றி ஓரணியில் நின்று திரளி கண்மாயைச் சிதைப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆதாரங்கள் இருந்தும் அலட்சியம் ஏன்?
கடந்த பிப்ரவரி 20, 2026 அன்று, எவ்வித அனுமதியுமின்றி திரளி கண்மாயில் இருந்து திருட்டுத்தனமாக மண் அள்ளிச் சென்ற லாரிகள் GPS வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர்களால் பிடிக்கப்பட்டன. இந்த அப்பட்டமான ஆதாரங்கள் கனிமவளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டும், இதுவரை சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது எந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புகார் குறித்து நேரில் சென்று விசாரணை செய்ய அதிகாரிகளுக்கு நேரமில்லை, ஆனால் அதே நிறுவனத்திற்கு மீண்டும் மண் அள்ள அனுமதி வழங்க மட்டும் கனிமவளத்துறை இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? எனத் திரளி கிராம மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

RTI அம்பலப்படுத்திய அதிகாரிகளின் ‘தகவல்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்கள், அதிகாரிகளின் முகத்திரையைக் கிழித்துள்ளன. புகார் அளித்து ஒரு மாதம் ஆகியும், அதிகாரிகள் இதுவரை ஒருமுறை கூட கள ஆய்வு நடத்தவில்லை என்பது RTI பதிலில் உறுதியாகியுள்ளது.
சுமார் 4 மீட்டர் ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்ட பள்ளங்கள் குறித்த தெளிவான புகைப்பட ஆதாரங்கள் கையில் இருந்தும், அதனை “யூகத்தின் அடிப்படையிலான புகார்” எனக் கூறி அதிகாரிகள் தள்ளுபடி செய்திருப்பது, அவர்கள் யாருக்குத் துணை போகிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

முதல்வர் மற்றும் ஆட்சியருக்கு அவசரப் புகார்!
ஆளுங்கட்சியின் சில முக்கியப் புள்ளிகள் ALR நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், நீதியைத் தேடிப் பொதுமக்கள் தற்போது தமிழக முதல்வர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் வாயிலாக விரிவான புகார் அளித்துள்ளனர்.
மக்களின் முக்கியக் கோரிக்கைகள்:
கனிமவளத்துறையிடம் அளிக்கப்பட்ட புகார் போல, முதல்வர் அலுவலகப் புகாரும் அதிகாரிகளால் நீர்த்துப் போகச் செய்யப்படக் கூடாது.

இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை முடியும் வரை, மண் அள்ள வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
விதிமுறை மீறிய மண் எடுப்பால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து நேரடி கள ஆய்வு நடத்த வேண்டும்.
20.02.2026 அன்று அனுமதியின்றி மண் அள்ளிய சட்டவிரோதச் செயலுக்காக ALR நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
நிர்வாகத்தின் முடிவு என்ன?
கனிமவளத்துறையின் ஒருதலைப்பட்சமான போக்கை மதுரை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்துவாரா? அல்லது நீர்நிலை சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பாரா? என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. திரளி கண்மாய் காப்பாற்றப்படுமா என்பது முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அடுத்தகட்ட நடவடிக்கையில்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






