இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி – 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
என்று தமிழக அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ‘எக்ஸ் தள’ பதிவில், “இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக ‘
கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றார்.
மேலும், ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது என்று சீமான் விமர்சித்து உள்ளார்.
‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ் டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
‘கேரளா ஸ்டோரி-2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமென்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
“என் அன்புச்சொந்தங்கள் குறிப்பாக நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன்.” என்று சீமான் தனது ‘எக்ஸ் தள’ பதிவில் தெரிவித்துள்ளார்.






