வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக, கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் விடுதலை-ன் மையக்குழு கூட்டம் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது.

திமுக- அதிமுக வேண்டாம்

கூட்டம் தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“1967 முதல் தமிழ்நாட்டை, திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. சுமார் 60 ஆண்டுகளாக, திராவிடக் கட்சிகள் இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழுக்கும் தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வதையே தம் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பட்டியல் சமூகத்திற்கு எதிரான இவர்களது செயல்பாடுகளுக்கு இப்போதாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக-வுக்கு ஆதரவு

மேலும், “திமுகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதேசமயம், அதிமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்காக, நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில், திமுக காங்கிரஸ், அதிமுக பாரதிய ஜனதா கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்போரை ஆதரிப்பதே சரியென்று நம்புகிறோம். அந்த அடிப்படையில் வருகின்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்க கட்சி முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசியலைப் பொறுத்த வரையில், மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.