மதுரை திருமங்கலம் அருகே திரளி பெரிய கண்மாய் பகுதியில் அளவுக்கு அதிகமாக மண் வளத்தை திருடி, அரசின் நான்குவழி சாலை அமைப்பதற்காக முறைகேடாக பயன்படுத்தி கண்வாய் பகுதியை கொஞ்சம்.., கொஞ்சமாக.. திருடும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட திரளி பெரிய கண்மாய் பகுதியில், திருமங்கலம் – தென்காசி நான்கு வழிச் சாலை பணிக்காக, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் மண் எடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட 1 மீட்டர் ஆழ அனுமதியை மீறி சுமார் 4 மீட்டர் ஆழம் வரை மண் எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக அள்ளப்படும் மண் சாலை பணிகளுக்காக பயன்படுத்தாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மண் தேவைப்படுவதாக கூறி, நீர் நிலையான திரளி பெரிய கண்மாயிலிருந்து மண் எடுக்கப்பட்ட சம்பவம் சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முறைகேடு – சமூக ஆர்வலர்கள் புகார்..!
இது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 22 அன்று சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட கனிமளவத்துறைக்கு எழுத்துப்பூர்வ புகார் மனு அனுப்பப்பட்டதாகவும், அந்த புகார் கடந்த 23ஆம் தேதி அன்று அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரப்பூர்வ ஒப்புகை அட்டையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

GPS புகைப்படங்கள் – ஆதாரத்துடன் புகார்
GPS புகைப்படங்களுடன் அளிக்கப்பட்ட புகார் மேற்கண்ட புகார் மனுவுடன், கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று எடுக்கப்பட்ட GPS புகைப்படங்களும் ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த GPS புகைப்படங்களில், கண்மாயின் உள்ளே மண் எடுக்கப்பட்ட இடங்கள் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் நேரம் கண்மாயில் உருவான ஆழமான பள்ளங்கள் தெளிவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த GPS புகைப்படங்களின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட 1 மீட்டரை விட பல மடங்கு அதிக ஆழத்தில், சுமார் 4 மீட்டர் வரை மண் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பு புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.I மூலம் கேட்கப்பட்ட தகவல்கள்
மதுரை மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்திற்கு RTI மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், புகார் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா? ஆய்வு அறிக்கை / நடவடிக்கை விவரங்கள் உள்ளதா? கண்மாயிலிருந்து மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட விதிமுறைகள் என்ன? புகார் அடிப்படையில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
RTI தரப்பில் அதிர்ச்சி பதில்
கனிமவளத்துறை சார்பில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ RTI பதிலில், புகார் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கான எந்த பதிவுகளும் இல்லை என்று கனிமவளத்துறை தெரிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், GPS புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் புகாருடன் இணைக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை எந்தவிதமான கள ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்ற தெரிகிறது.

மீண்டும் மண் எடுப்பு நடைபெறுவதாக புகார்
இந்நிலையில், திருமங்கலம் – தென்காசி நான்கு வழி சாலை பணிக்காக திரளி பெரிய கண்மாய் பகுதியில் மீண்டும் மண் எடுப்பு நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே புகார் நிலுவையில் இருக்கும் சூழலில், ஆய்வு இல்லாமல் மீண்டும் தனியார் நிறுவனத்திற்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அல்லது மீண்டும் அனுமதி வழங்க அதிகாரிகள் தயாராக உள்ளார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கண்மாய் பாதுகாப்பு – பொதுமக்கள் கவலை
திரளி பெரிய கண்மாய், விவசாயத்திற்கு முக்கியமான நீர்நிலையாகவும், சுற்றுச்சூழல் சமநிலைக்கு அவசியமான பகுதியாகவும் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு வழிச் சாலை பணிகளுக்காக நீர்நிலைகளில் இருந்து மண் எடுப்பது, நீர்த் தேக்க திறன் குறைவு, விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன பாதிப்பு, நிலத்தடி நீர் சரிவு போன்ற நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அப்பகுதி மக்கள் எச்சரிக்கின்றனர்.
அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை
நான்கு வழிச் சாலை பணிக்காக கண்மாயிலிருந்து எடுக்கப்பட்ட மண் விவரம் குறித்து விசாரணை GPS புகைப்படங்கள் மற்றும் புகார் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறை மீறல் உறுதி செய்யப்பட்டால் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை, திரளி பெரிய கண்மாயின் பாதுகாப்பு உறுதி என உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.






