மு.க.அழகிரி ஆதரவாளரும், திமுக நிர்வாகியுமான மதுரை எஸ்.ஆர். கோபி தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள்  கட்சியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய நிர்வாகிகளை தங்கள் அணிக்கு இணைக்கும் வகையில் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவில் இருந்து திமுகவிற்கும் ஏராளமானோர் தாவி வருகிறார்கள்.

முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

இந்நிலையில், மு.க.அழகிரி தீவிர ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான
எஸ்.ஆர்.கோபி தனது ஆதரவாளர்களுடன் சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த சில மாதங்களாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் தொடர்ந்து இணைந்து வந்தனர். இந்நிலையில் அதிமுகவில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் இணைந்துள்ளது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.