September 10, 2026

சேலம் : தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசிய பொதுக்கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

சேலத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் மீண்டும் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம்  நடைபெற்றது. இன்று காலை தொடங்கிய கூட்டம் சில மணி நேரங்களிலே முடிவடைந்தது. இந்தக் கூட்டத்திற்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்திருந்தனர்.

வடமாநிலத்தவர் உயிரிழப்பு

கூட்டத்தில் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சூரஜ் என்று 37 வயதான நபர், மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சூரஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ், சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர்.

தவெக – அரசியல் சிக்கல்

ஏற்கனவே கரூரில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்திய போது 41 பேர் பரிதாபமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அந்த சர்ச்சை ஓயாத நிலையில் மீண்டும் சேலம் கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் விஜய்யின் அரசியலில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்

You may have missed