September 10, 2026

சவுக்கு சங்கருக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு – சவுக்கு மீடியா ஊழியர்களை கைது செய்வதற்கு கடும் எதிர்ப்பு!

சவுக்கு மீடியாவைச் சேர்ந்த ஊழியர் ஜெயப்பிரகாஷ் மற்றும் முன்னாள் ஊழியர் லியோ ஸ்டாலின் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “சவுக்கு மீடியாவின் அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்ய முயல்வதாக செய்திகள் வருகின்றன என்றும்,
சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய பிறகும், சவுக்கு மீடியா செயல்பாட்டை முடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், “மற்றும் பலர்” என்று FIR-ல் போட்டு, அதை வைத்துக்கொண்டு அந்நிறுவனத்தின் இந்நாள், முன்னாள் ஊழியர்களை கைது செய்யத் துடிப்பது, திமுக அரசின் கொடுங்கோன்மை குணத்தையும், ஜனநாயக உரிமைகளை மதியாத தன்மையும் தோலுரித்து காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முறைகேடுகளின் மொத்த உருவமாக இருக்கும் இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், அதை ஏற்கவோ, மறுக்கவோ திராணியில்லாமல், கைது போன்ற அராஜக நடவடிக்கைகளால் ஆட்சிக்கு எதிரான ஜனநாயகக் குரலை ஒடுக்க நினைக்கும் திமுக-வின் கோரப் பாசிசப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதைதொடர்ந்து, “சவுக்கு மீடியா ஊழியர்கள் மீதான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ் தள’ பதிவில் தெரிவித்துள்ளார்

You may have missed