சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என்று தவிர கட்சித்தலைவர் விஜய் தனது ‘எக்ஸ் தள பக்கத்தில்’ பதிவிட்டுள்ளார்.

கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்
மேலும், “இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.

“தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்” என்று விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

“இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்!” என்று தவெக தலைவர் விஜய் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
திமுகவுக்கு சாதகமாக செயல்பாடும் போலீசார்?
திமுக குண்டர்களால், தவெக-வினர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் உரிய முறையில் வழக்கு பதியவில்லை என்றும், திமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் தவெக நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.






