வலுவான கூட்டணியுடன் இணைய பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநாட்டு தீா்மான புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், புதிய தமிழகம் கட்சி சாா்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறோம். மாநாடு நடத்தியுள்ளோம். எங்கள் கட்சி தோ்தலுக்கு ஆயத்தமாக உள்ளது” என்றார்.

“கடந்த பல ஆண்டுகளாக ஆற்று மணல் கடத்துவதும், கனிம வளங்களை கொள்ளையடிப்பதும் தொடா் கதையாக உள்ளது. கரூரில் மணல் கொள்ளையை படம் பிடிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளா், ஒளிப்பதிவாளரை தாக்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, கனிமவள கொள்ளை இல்லாத ஆட்சி மலர வேண்டும். வலுவான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அதைநோக்கியே பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்றும், இந்தமுறை தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம்” என்று கிருஷ்ணசாமி குறிப்பிட்டு பேசியுள்ளார்.