தமிழக வெற்றிக் கழக (தவெக) நிகழ்ச்சியில் விஜய்க்காக பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடிய பாட்டு, சர்ச்சையானதை அடுத்து, அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தவெக-வின் 3ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் “மருதமலை மாமணியே முருகையா..” பாடலை விஜயை வைத்து ஒப்பிட்டு பாடகர் வேல்முருகன் பாடினார். அது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

முருகரை அவமத்தித்ததாகவும், அது முருக பக்தர்கள் மனதை புண்படுத்தியதாகவும் கூறி நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வேல்முருகன், தவெக தலைவர் விஜய், தவெக நிர்வாகி ராஜ்மோகன் உள்ளிட்டோர் மீது இந்து முன்னணி அமைப்பினரும், பாஜகவினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீடியோ வெளியிட்ட பாடகர் வேல்முருகன்

இது விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பாடகர் வேல்முருகன் இதுகுறித்து விளக்கவும் அளித்துள்ளார்.

வீடியோவில் அவர் பேசியதாவது, “சர்ச்சையாக வேண்டும் என அப்படி செய்யவில்லை. விஜய்க்கும், அந்த பாட்டு பாடியதற்கும் துளிகூட சம்பந்தமில்லை. தொடர்ச்சியாக பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது உற்சாக படுத்த வேண்டும் என எதேச்சையாக பாடினேன்.

என்னைப் படைத்த முருகனை நான் அவமானம் செய்வது என்பது என்னை நானே கத்தியால் குத்திக் கொல்வது போன்றது. நான் விஷம் குடித்த மாதிரி. ஒருநாளும் அப்படி செய்ய மாட்டேன்.

பாடல் பாடும்போது எதிரில் இருப்பவர்களை உற்சாகப்படுத்த இந்த பாடலை பாடினால் கொஞ்சம் வேகமாக இருக்கும் என நினைத்து அதை தேர்வு செய்தேன். முருகப்பெருமான் எல்லோருக்கும் வழிகாட்டுகிறார். எல்லா வளமும் கொடுக்கிறார்.

எந்த மேடையில் போய் பாடினாலும் அந்தந்த இடங்களின் வரிகளை போட்டு பாடுவேன். அதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் யாருக்கும் சம்பந்தமில்லை. ஒருவேளை யாராவது நான் தவறாக நினைத்து பாடி விட்டேன் என நினைத்தால் அவர்கள் அனைவரிடத்திலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.