சிவகாசி அருகே விஇஓ அலுவலகத்தில் புகுந்து திமுக நிர்வாகி தனது மகளுடன் விஏஓவை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஏஓ அலுவலகத்தில் திமுக நிர்வாகி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்கு உட்பட்ட ஈஞ்சாரை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கூடலிங்கம். திமுக தெற்கு ஒன்றிய துணை அமைப்பாளரான இவர் மாவட்ட தொழில் மையத்தில், மானிய கடன் பெற விண்ணப்பித்துள்ளார். அதற்காக கிராமப்புற வசிப்பிட சான்றிதழ் தேவைப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தனது மகனுடன் சென்று சான்றிதழ் கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலகத்தால்தான் வழங்க முடியும், தங்களால் அதை வழங்க இயலாது என கிராம நிர்வாக அலுவலர் யாகராஜன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இருதரப்பும் இடையே வாக்குவாதம்

இதனால் இரு தரப்புக்கும், இடையே, வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கோவமடைந்த திமுக நிர்வாகியான கூடலிங்கம் மகனுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செல்போனில் வீடியோ எடுத்த விஏஓ

இதனால், தற்காப்பிற்காக கிராம நிர்வாக அலுவலர் யாகராஜனும், உதவியாளர் ராஜா முத்துப்பாண்டியும் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அதை கவனித்த திமுக நிர்வாகி செல்போனைப் பறித்து கீழே வீசி உடைத்ததுடன், விஏஒ உதவியாளர் ராஜா முத்துப்பாண்டியை, சரமாரியாக அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த முத்துப்பாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகன் கைது – தந்தை தலைமறைவு

இதுதொடர்பான புகாரில் கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயிலுமுத்து மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தாக்குதல் மற்றும் ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் வெயிலுமுத்துவை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகியான கூடலிங்கத்தை தேடி வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் அரசு அலுவலகத்தில் புகுந்து விஏஓவை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம், திமுகவிற்கு அவப்பெயரை பெற்று தந்துள்ளது.