திருத்தணியில் சரியாக பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து ஒன்று சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து டி5 என்ற நகர பேருந்து பயணிகளுடன் பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இப்பேருந்து, திருத்தணி – பொதட்டூர்பேட்டை
நெடுஞ்சாலையில், கிருஷ்ணசமுத்திரம் வளைவு பகுதியில் மேடுபள்ளமாக இருந்ததால், எதிர்த்திசையில் திருத்தணி நோக்கி வந்த கரும்பு டிராக்டரை, பேருந்து ஓட்டுநர் கடந்து செல்ல முயன்றுள்ளார்.
இதனால் அரசு பேருந்தை ஓட்டுநர் பின்னோக்கி இயக்கியபோது பிரேக் பழுதால் பிடிக்க முடியாமல் வேகமாக இயங்கியது. இதையடுத்து, அப்பேருந்து சாலையோரத்தில் இருந்த முருங்கை மரத்தின்மீது மோதி, அதே வேகத்தில் மரத்தின் பின்னால் இருந்த சிமென்ட் வீட்டின் பின்புறத்தில் மோதி நின்றது. இதில், அந்த வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் நொறுங்கி சேதமானது.
அந்த வீட்டின் பின்பக்கத்தில் வேகமாக மோதியதில் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. முதலில் வீட்டின் முன்பிருந்த முருங்கை மரத்தில் வேகமாக மோதிய அரசு பேருந்து, பின்னர் வேகம் குறைந்த நிலையில் வீட்டின் பின்பக்க சுவரில் மோதியதால், வீட்டுக்குள் இருந்த உரிமையாளர் முரளி, மனைவி மற்றும் குடும்பத்தினர் எவ்வித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காயமடைந்தோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது






