விழுப்புரத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை வரதட்சண கொடுமை செய்து, ஆணவக்கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டாரத்தில், அழகப்பசமூத்திரம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த இளம்பெண் தேவஜெய ஸ்ரீபிரியா. வயது 22 வயதாகும் இப்பெண் அந்தோணிராஜ் என்பவரின் மகள் ஆவார்.

இவருடைய அண்ணன் ரிச்சர்ட் என்பவரும், தேவஜெய ஸ்ரீபிரியாவும் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை படித்தார்கள். படிக்கும் போது, விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வட்டம் மேல்பாதி சொரணாவூர் வன்னியர் கிராமத்தை  சேர்ந்த வசந்தகுமார் என்பவர் காதல் செய்வதாக கூறப்படுகிறது.

படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை பார்த்த பிரியாவை அழைத்து வந்த வசந்தகுமார், ஒரு கோயிலில் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2 மாத காலமாக வசந்தகுமார் தனது காதல் மனைவி பிரிவை, தன் வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியுள்ளார்.

இந்த 2 மாத காலமும், தனது தாய், தந்தை, அண்ணன் உள்ளிட்டு அனைவரோடு சேர்ந்து வசந்தகுமார்  தொடர்ச்சியாக வரதட்சணை கேட்டும், சாதி ரீதியான பெயரை சொல்லி இழிவுப்படுத்தியும் அடித்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இளம்பெண் மர்ம மரணம்..?

இளம்பெண்ணான ஸ்ரீபிரியாவுக்கும் அப்பா, அம்மா கிடையாது. தனது பாட்டி மற்றும் அண்ணனின் ஆதரவில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஸ்ரீபிரியாவின் சடலம் கிடப்பதாகவும் அப்பெண்ணின் அண்ணனுக்கும் பாட்டிக்கும் வசந்தகுமார் குடும்பத்தினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த ஸ்ரீபிரியாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து குற்றம்சாட்டப்படும் வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.