தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்களை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முள்ளக்காடு, நேருஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினதுரை. இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் மாதம் 10ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இவரது மளிகை கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 10 ரூபாய் நாணயங்கள் மற்றும் அரை லிட்டர், ஒரு லிட்டர் குளிர்பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் 5 உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை திருடிச் சென்றனர்.
தெருவில் நாய்கள் குறைக்காமல் இருக்க பிஸ்கட் மற்றும் சிப்ஸ்களை போட்டு விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதேசமயத்தில், நேருஜி நகரில் திருட்டு நடைபெற்ற மளிகை கடை அருகே உள்ள பாஸ்கர் என்பவர் வீட்டு முன்பாக முன்விரோதம் காரணமாக 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி 3 சிறுவர்களை கைது செய்து, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், கடையில் பொருட்கள் திருட்டு போன சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டிலில் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று போலீசார் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு சுவரொட்டிகள் அப்பகுதியில் உள்ள அனைத்து பங்குகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.






