மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

​நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி மற்றும் நிதி

  • வரி விகிதங்கள்: தனிநபர் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய மற்றும் புதிய வரி முறைகள் அப்படியே தொடர்கின்றன.
  • புதிய வருமான வரிச் சட்டம்: 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, எளிமையாக்கப்பட்ட “புதிய வருமான வரிச் சட்டம் 2025” ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிதிப் பற்றாக்குறை: 2026-27 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.3% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • முதலீட்டு வரி : பங்குச்சந்தை வர்த்தகத்தில் ‘Futures and Options’ மீதான பத்திர பரிவர்த்தனை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

​உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து

  • அதிவேக ரயில் வழித்தடங்கள்: நாடு முழுவதும் 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். குறிப்பாக சென்னை – ஹைதராபாத், மும்பை – புனே மற்றும் ஹைதராபாத் – பெங்களூரு இடையே அதிவேக ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரிய வகை கனிமங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அரிய வகை கனிமங்களை (Rare Earth Minerals) எடுப்பதற்கான பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்படும். தேசிய நீர்வழித்தடங்கள்: புதிய நீர்வழித்தடங்களை உருவாக்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

​தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

  • MSME வளர்ச்சி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு (MSME) ரூ.10,000 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • செமிகண்டக்டர்: செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை மேம்படுத்த ரூ.40,000 கோடி (Semicon 2.0 திட்டம்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜவுளித்துறை: சர்வதேச அளவில் இந்திய ஜவுளித்துறையை உயர்த்த புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

​மருத்துவம் மற்றும் இதர அறிவிப்புகள்

  • புற்றுநோய் மருந்துகள்: 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • உயிரி மருந்து (Bio-Pharma): இந்தியாவை உயிரி மருந்து உற்பத்தி மையமாக மாற்ற ரூ.10,000 கோடி நிதி மற்றும் 1,000 மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.
  • கல்விக் கடன்: மருத்துவப் படிப்புக்கான கல்விக் கடன் மீதான வரி (TCS) 5%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • விபத்து இழப்பீடு: மோட்டார் வாகன விபத்துகளில் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கு இனி வருமான வரி கிடையாது.