சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிறைவுற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் இன்று திறந்து வைத்தார்.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்றுள்ளார்.

இன்று காலை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து காரைக்குடியில் திருச்சி பைபாஸ் சாலையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் ரூ. 13 கோடி மதிப்ப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர், ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், 15 ஆயிரத்து 453 பயனாளிகளுக்கு ரூ. 205 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து சட்டக்கல்லூரி அருகே ரூ. 32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.