“சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அய்யன் வள்ளுவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அய்யன் திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறள்கள் வழி நடக்க வேண்டும் என்றும் குறள்களை படித்து அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி கொண்டு, அதன்வழி  நடக்க வேண்டும் என்றும் தமிழறிஞர்கள் கூறுகிறார்கள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அய்யன் திருவள்ளுவர் தினத்தில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


அந்தவகையில், இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.