வங்கதேசத்தின் முதலாவது பெண் பிரதமர் என்ற சாதனைக்குரிய முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

வங்கதேச அதிபராக இருந்த ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியா. வங்கதேச அதிபராக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவத்தால் கொல்லப்பட்ட பிறகு ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், சில ஆண்டுகளில் அவரும் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி கலீதா ஜியா அரசியலில் நுழைந்தார்.

1990-ம் ஆண்டு ராணுவத் தளபதி எர்ஷாத்தின் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹசீனா நடத்திய தொடர் போராட்டத்தில் கலீதா ஜியாவும் இணைந்தார். எர்ஷாத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை கலீதா ஜியா படைத்தார். வங்கதேச பிரதமராக முதன்முறையாக 1991 மார்ச் முதல் 1996 மார்ச் வரை பதவி வகித்தார் கலீதா ஜியா. பின்னர் 2001 ஜூன் முதல் 2006 அக்டோபர் வரை 2-வது முறையாகவும் பிரதமராக அவர் பதவி வகித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 6 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு நீரிழிவு, இதயம், நுரையீரல் தொற்று, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. 2024-ம் ஆண்டு வங்க தேச அதிபர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், கலீதா ஜியாவை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கலிதா ஜியா உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிசம்பர் 30) காலமானார். வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராக கலீதா ஜியா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.