வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளன்று வைணவ திருத்தலங்களில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர்கள், ஜீயர்கள், தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டு, சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், காலை 5 மணி முதல் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

‘பூலோக வைகுண்டம்’ எனப் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.45 மணி அளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான தரிசனம் செய்தனர். இன்று ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.

தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களிலும், வெகு சிறப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் உள்ளிட்ட வைணவ திருத்தலங்களில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.