பாட்டாளி மக்கள் கட்சி(பாமக) தலைவராக டாக்டர் ராமதாஸை மீண்டும் நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், பாமகவில் நடக்கும் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 29) நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக டாக்டர் ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் மே 28-ம் தேதியுடன் முடிவடைந்ததாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக கவுரவத் தலைவராக ஜி.கே.மணி, பொதுச்செயலாளராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் காந்திமதி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும், பார்ம் ஏ, பி ஆகியவற்றில் கையெடுத்திடும் உரிமை. கூட்டணி குறித்து பேசுவது உள்ளிட்ட அதிகாரங்கள் டாக்டர் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்திறகு முன்னதாக டாக்டர் ராமதாஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “பாமகவை, மறுபடியும் மக்களுக்கான கட்சியாக மாற்றுவதற்கான போராட்டம் இது.

அன்புமணி பக்கம் இருக்கிற என் தொண்டர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கிறேன். தந்திரங்களுக்கு ஏமாந்துவிடாதீர்கள். ஒரே ஒரு கேள்வி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், நாளைக்கு இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா?. எனக்கு வயதாகிவிட்டது. இதுதான் எனது கடைசி யுத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காகப் போராடுவேன். கோபத்தில் அல்ல, அறத்தோடு, அன்போட நிற்பேன்” என்று தெரிவித்திருந்தார்.