வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறை அதிகரித்துள்ளது. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி என்பவர் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, இந்து மதத்தைச் சேர்ந்த தீபு சந்திரதாஸ் என்ற இளைஞர் ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை நிர்வாணமாக்கி நடுரோட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மண்டல்(29) என்ற இந்து இளைஞர் டிசம்பர் 24 -ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்ரித் மண்டலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அம்ரித் மண்டலின் நண்பரான முகமது சலீமை கைது செய்தனர். அவரிடமிருந்து லைசென்ஸ்சுடன் கூடிய கைத்துப்பாக்கி ஒன்றும், கள்ளத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. அம்ரித் மண்டல் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டுள்ளது. அம்ரித் மண்டல் சம்பந்தப்பட்ட நாளில் மக்களை மிரட்டி பணம் பறிக்க அந்தப் பகுதிக்கு வந்ததாகவும், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் இருந்து சமீபத்தில் வங்கதேசத்திற்கு திரும்பிய அம்ரித் மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கிறார். டிசம்பர் 24-ம் தேதி ஷாஹிதுல் இஸ்லாம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க அம்ரித் மண்டல் மற்றும் முகமது சலீம் ஆகியோர் சென்றுள்ளனர். இதைக்கண்டு ஷாஹிதுல் இஸ்லாம் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தினர் திரண்டு அம்ரித் மண்டலை தாக்கியதாக போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. வங்கதேசத்தில் அடுத்தடுத்த இரண்டு இந்து இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது கவலையளிப்பதாக பலர் கவலைத் தெரிவித்துள்ளனர்.