கொல்கத்தா விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வருகை தந்த கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானும், உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்ற அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி(38). பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும், கடந்த 2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற மெஸ்ஸி, இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதுடன், ஹைதராபாத், கொல்கத்தா, அஹமதாபாத், மும்பை மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு தினம் தனி விமானம் மூலம் கொல்கல்த்தா விமான நிலையத்திற்கு மெஸ்ஸி வந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லியோனல் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்கவுள்ளார். அந்நிகழ்ச்சியின் போது அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள், கிளப் அணி வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அதனைத் தொடர்ந்து சந்தோஷ் கோப்பையை வென்ற மேற்கு வங்க அணியை மெஸ்ஸி கவுரவிப்பதுடன், அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நிறுவப்பட்டுள்ள 70 உயர உருவச்சிலையும் மெஸ்ஸி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் அவருடன், ரோட்ரிகோ டி பால் (அர்ஜென்டினா) மற்றும் லூயிஸ் சுவாரெஸ் (உருகுவே), மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொல்கத்தாவிலிருந்து இன்று ஹைதராபாத்திற்கு வருகை தரும் மெஸ்ஸி, உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அங்கு நடைபெற இருக்கும் கண்காட்சி கால்பந்து போட்டியை பார்வையிடும் மெஸ்ஸி, அதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளை வழங்கவுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற இருக்கும் மெஸ்ஸியின் தி கோட்  டூர் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டின் ஆரம்ப விலையானது ரூ.1,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.