சபரிமலையில் யாத்திரை மேற்கொண்ட பெண் பக்தர் ஒருவர் மலையேறும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக நவம்பர் 16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. ஐயப்பனை தரிசிப்பதற்காக மாநிலம் முழுவதும் மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகையால் சன்னிதானம் நிரம்பி வருகிறது.
பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நாள்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்தோர் 70 ஆயிரம் பேர், நேரடி முன்பதிவு செய்தோர் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று ஒருநாள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை வந்துள்ளனர். ஒன்றரை நாளில் 1,63,000-க்கும் மேற்பட்டோர் சன்னதிக்கு வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சன்னதியில் கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக பம்பாவிலிருந்து ஏற்பாடுகளைச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சன்னதியில் கூட்டத்தைக் கருத்தில் கொண்ட பின்னரே பக்தர்கள் இப்போது பம்பாவிலிருந்து உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று சராசரியாக ஆறு மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சன்னதிக்குள் நுழைய முடிந்தது. இதற்கிடையில், பக்தர்களின் கூட்டத்தைக் குறைக்கும் பொருட்டு, நேற்று முதல் பக்தர்கள் சத்திரம் மற்றும் காட்டுப்பாதைகள் வழியாக நுழையத் தொடங்கியுள்ளனர். சபரிமலையில் மொத்தம் 18 மணி நேர தரிசன நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சபரிமலைக்கு யாத்திரை சென்ற கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்த சதி(58) என்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்பாச்சிமேடு பகுதியில் மலை ஏறும் போது மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இது பக்தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






