டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படியில் அல் – பலா பல்கலைக்கழக குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி இரவு ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியாணா, குஜராத், உத்தரப் பிரதேச போலீஸாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் முதற்கட்ட விசாரணையில், காஷ்மீர், உத்தரர் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்து டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 5 மருத்துவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 200 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதில் சந்தேகத்துக்குரிய 60 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லி குண்டுவெடிப்பில் தற்கொலைப் படை தீவிரவாதியாக செயல்பட்ட மருத்துவர் உமர் நபி மற்றும் மருத்துவர்கள் ஷாகின், முஜம்மில் ஷகீல் ஆகியோர் ஹரியாணாவின் பரிதாபாத்தில் உள்ள அல் – பலா மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்தனர். அந்த மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்டே டெல்லி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் அல் -பலா மருத்துவக் கல்லூரி மற்றும் அங்கு பணியாற்றிய தீவிரவாத மருத்துவர்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்து அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதன்படி அல் – பலா மருத்துவக் கல்லூரி உட்பட அதனோடு தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அப்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல் – பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பரிதாபாத்தில் உள்ள அல் – பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும், அந்த பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.