பிஹார் மாநில தேர்தல் பிரசாரத்திற்கான தூதர் பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திராவை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
தமிழில் ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘யுத்தம் செய்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை நீது சந்திரா. ‘யுத்தம் செய் படத்தில் இவர் ஆடிய ‘கன்னித்தீவு பொண்ணா’ பாடல் மிகவும் பிரபலமானது. நீது சந்திரா பிஹார் மாநிலம், பாட்னாவில் பிறந்தவர்.
இந்த நிலையில், பிஹார் மாநிலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக விளம்பர தூதராக நடிகை நீது சந்திரா, நடிகர் கிராந்தி பிரகாஷ் ஜா ஆகியோரை தேர்தல் ஆணையம் நியமித்தது. தேர்தல் ஆணையத்தால் தூதராக நியமிக்கப்பட்டவர் கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால், பிஹார் தேர்தலின் போது நீது சந்திரா சில கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார விளம்பர தூதர் பதவியில் இருந்து நீது சந்திராவை தேர்தல் ஆணையம் நீ்க்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார், நடிகை நீது சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் நடைமுறையின்போது சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நீங்கள் கருத்து தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இது உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு எதிரானது. எனவே தேர்தல் கமிஷன் தூதர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் நீது சந்திரா அப்செட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
