டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக 10 பேர் கொண்ட குழுவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைத்துள்ளது.
டெல்லி செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கார் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக அருகில் இருந்த வாகனங்களிலும் தீப்பிடித்துக் கொண்டன. இந்த கார் வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர்படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவைச் சேர்ந்த முஸம்மில் கனி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த ஷஹீன் சயீத், ஜம்மு – காஷ்மீரின் குல்காமை சேர்ந்த அதீல், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, தெலங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், ஸ்ரீநகரை சேர்ந்த தஜமுல் ஆகிய 6 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை என்ஐஏ அமைத்துள்ளது. ஒரு ஐ.ஜி, இரண்டு டிஐஜிக்கள், மூன்று எஸ்.பிக்கள் மற்றும் டிஎஸ்பி அளவிலான அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, என்ஐஏ ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் ஹரியாணா காவல்துறையினரிடமிருந்து ஜெய்ஷ் – இ- முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்களையும் என்ஐஏ கைப்பற்றும் என்று தெரிகிறது.


