13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ கைது செய்யப்பட்டுள்ளார்.
அகில இந்திய மகாசபா தலைவராக இருப்பவர் கோடம்பாக்கம் ஸ்ரீ. இவரை சென்னை தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ வழக்கில் தற்போது கைது செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோடம்பாக்கம் பகுதியில் பெற்றோர் இல்லாத ஆதரவற்ற 13 வயது சிறுமி அவரது அத்தை வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு புத்தாடை எடுத்து தருவதாக கூறி அவருடைய அத்தை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார்
இதன் பேரில் சென்னை ஈசிஆரில் இருந்த கோடம்பாக்கம் ஸ்ரீ, அந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளார். இதன் பேரில் கோடம்பாக்கம் ஸ்ரீ, அந்த சிறுமியின் அத்தை ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சிறுமியின் அத்தையின் செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த சிறுமியை வீடியோ எடுத்து வைத்து அவரது அத்தை மிரட்டியுள்ளார். அதனால் அந்த செல்போனில் ஆபாச வீடியோ இருக்கிறதா என போலீஸார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோடம்பாக்கம் ஸ்ரீ, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


