மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைச் கடுமையாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
அதன்படி, இத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
வெளியூர்க்காரர்களுக்குத் தடை: தொகுதிக்கு வெளியே இருந்து தேர்தல் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், வெளியூர் பணியாளர்கள் மற்றும் அந்தந்தத் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாத அனைவரும் இன்று மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரத்திற்குத் தடை: இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டமோ அல்லது ஊர்வலமோ நடத்தவோ, பங்கேற்கவோ அனுமதியில்லை. மேலும், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான தேர்தல் பிரச்சார விவகாரங்களையும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாகன அனுமதிகள் ரத்து: வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்து வாகன அனுமதிகளும் இன்று மாலை 6 மணி முதல் செயலற்றதாகிவிடும். மேலும், வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகனங்களைப் பயன்படுத்துவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான மனிஷ் நாரணவரே ஆகியோர் வெளியிட்டுள்ள இந்த உத்தரவுகள், தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது – புதிய தொழில் முதலீடுகள், தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முக்கிய ஆலோசனை!
சொந்த வீடு கட்ட ரூ.1 கோடி வரை கடன்! 20 ஆண்டுகள் திருப்பிச் செலுத்த அவகாசம் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
மதுரையில் எம்.எல்.ஏ வருகைக்காக 2½ மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள்! போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி!