மதுரை, செப். 20:
மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய மூன்று கொலைச் சம்பவங்கள் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியுள்ளன.
போலீஸ் நிலையம் அருகே ரவுடி வெட்டிப் படுகொலை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சோலையழகுபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சப்பாணி சரவணன் (வயது 50). பிரபல ரவுடியான இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
வழக்கம்போல் அப்பகுதியிலுள்ள டீக்கடைக்குச் சென்று டீ குடித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்ட முயன்றனர்.
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சரவணன் நடுரோட்டில் ஓட முயன்றபோதிலும், அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெறித்தனமாக வெட்டிக் கொலை செய்தது. போலீஸ் நிலையத்திற்கு அருகிலும், அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலும் நடந்த இந்த பகிரங்கப் படுகொலை பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் தொடரும் வன்முறை
மதுரை மாநகரில் ரவுடி சரவணன் கொல்லப்பட்ட அதே நாளில், புறநகர்ப் பகுதியான மேலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மெக்கானிக் செல்லதுரை என்பவரும், ஒத்தக்கடை அருகே அன்னமயில் என்ற பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் பதிவான இந்த மூன்று கொலைச் சம்பவங்கள் பொதுமக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

More Stories
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர் !
பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீச்சு: தஞ்சை, பந்தலூரில் பரபரப்பு — 7 பேர் கைது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்