September 9, 2026

தவெக – காங்கிரஸ் கூட்டணி எந்த நேரத்திலும் முறியலாம்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை

சிவகாசி:

தமிழகத்தில் தவெக – காங்கிரஸ் கூட்டணி எந்த நேரத்திலும் முறியக்கூடும் என்றும், தற்போதைய ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

“சட்டமன்றத்திற்குப் புதிதாகப் பல உறுப்பினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்குப் போதிய அனுபவம் இல்லாததால், சில மாதங்களில் தேவையான அனுபவம் கிடைத்துவிடும். எனவே, தற்போது சட்டமன்றத்தில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகப் பார்க்கத் தேவையில்லை.

ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும் தங்கள் தலைவரை முதலமைச்சராகவோ, பிரதமராகவோ கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். அதேபோல்தான் விஜய் ரசிகர்களும் அவரை பிரதமராகக் கற்பனை செய்து பார்க்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி மிகவும் வலுவான தலைவர்; அவரை எதிர்கொள்ளும் துணிச்சல் தற்போது யாருக்கும் இல்லை.

தவெக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம். எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்பதால், அவர்கள் சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் புதிய சட்டமன்றக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டபோது அதற்கு திமுக முட்டுக்கட்டையாக இருந்தது. தற்போதைய தவெக ஆட்சியில் புதிய சட்டமன்றக் கட்டடம் உருவானால் மகிழ்ச்சியே.”

— இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may have missed