சென்னை:
சென்னையில் இன்று நடைபெறும் மண்டல அளவிலான தேர்தல் விழிப்புணர்வு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னை வருகை தந்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் மண்டல மாநாடு
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் இணைந்து ‘ஜனநாயகத்தை கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தும் ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மற்றும் ECINET’ குறித்த மண்டல மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முழு நாளும் நடைபெறுகிறது.
வருங்கால வாக்காளர்களான மாணவ சமுதாயத்தினரிடையே அரசியலமைப்பு மற்றும் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், களப்பணிகளில் டிஜிட்டல் தளங்களை முழுமையாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகள் & சிறப்பம்சங்கள்
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடல்:காலை அமர்வில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சுமார் 500 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLOs) நேரடியாகக் கலந்துரையாடுகிறார். அப்போது கள அளவிலான புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் களப்பணி சார்ந்த அனுபவங்கள், ஆலோசனைகளைக் கேட்டறிகிறார்.
- மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உரை:மதிய அமர்வில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஜனநாயகப் பங்களிப்பு குறித்து உரையாற்றும் அவர், அதைத் தொடர்ந்து நடைபெறும் கேள்வி–பதில் அமர்விலும் பங்கேற்கிறார்.
- நேரடி செயல்விளக்கங்கள் & தொழில்நுட்ப கண்காட்சி:இம்மாநாட்டில் வாக்காளர் பதிவு, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளின் நேரடி செயல்விளக்கங்கள், விழிப்புணர்வு கண்காட்சிகள், வினாடி-வினா போட்டிகள் மற்றும் ELC 2.0, ECINET போன்ற புதிய தொழில்நுட்ப செயலிகளின் பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பு
இந்த மாநாட்டில் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, மூத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், துணை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்கள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கள்ளனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!