ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை:

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழலில் திமுகவில் அவருக்கு எதிர்பார்த்த பதவிகள் வழங்கப்படாததால், அவர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வந்தார். இந்நிலையில், தனது தந்தை தவெகவில் இணைவதே பொருத்தமாக இருக்கும் என்று அவரது மகன் ரவீந்திரநாத் யோசனை கூறியதாகவும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தத் தகவலை அவர்கள் முதல்வர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், அவரும் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் தெரிகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தவும், அங்குள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பவும் ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொள்ள தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும், அவருக்கு கட்சியில் உரிய முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதோடு, விரைவில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக அவர் இணைவார் என்றும், இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.