அமைச்சர் பதவி பறிப்பா? திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. பல்லவிக்கு வாய்ப்பு? த.வெ.க. தலைமை தீவிர ஆலோசனை!

சென்னை:

ராஜபாளையம் பகுதியில் அரசு அலுவலகங்களில் லட்டு வழங்கிய விவகாரம் மற்றும் கசிந்த ‘மிரட்டல் ஆடியோ’ சர்ச்சை காரணமாக, தமிழக அரசியல் களம் தினமும் ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் மீது முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கை ? எடுக்கத் திட்டமிட்டு வருவதாகவும், அவருக்குப் பதிலாக புதியவருக்கு வாய்ப்பு அளிக்கப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

​ஆடியோ சர்ச்சையும் வெடித்த அதிரடியும்:

​த.வெ.க. ஒன்றிய செயலாளர் ராஜகுருவிடம் பேசப்பட்டதாகக் கூறப்படும் ஆடியோவில் இடம் பெற்ற ஆவேச வார்த்தைகள் இணையத்தில் தீயாகப் பரவின. இதன் தொடர்ச்சியாக த.வெ.க. நிர்வாகி ராஜகுருவை கட்சியிலிருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. இருப்பினும், “எலும்பை உடைத்திடுவேன்னு பேசிய பேச்சுக்காக திமுக எம்.எல்.ஏ சிறையில் இருக்கும் போது, ஆடியோவில் மிரட்டிய அமைச்சருக்குப் பதவி நீடிப்பா?” என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

​தலைமை பரிசீலனையில் திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. பல்லவி?

​பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கருத்தில் கொண்டு, கட்சியின் பிம்பத்தைக் காப்பாற்ற சமூக நலத்துறை அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற பேச்சுகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

​இந்தச் சூழலில், திரு.வி.க. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். பல்லவி  பெயர் தவெக தலைமை வட்டாரத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

​ஏன் பல்லவி?: இளம் பெண் மக்கள் பிரதிநிதியான இவர், தொகுதி மக்களிடையே நல்ல நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறார். சமூக நலத்துறையைக் கவனித்துக் கொள்ள ஒரு துடிப்பான பெண் பிரதிநிதியை நியமிப்பது கட்சியின் நன்மதிப்பை உயர்த்தும் எனத் தலைமை யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​த.வெ.க. வட்டாரத்தில் நிலவும் பரபரப்பு:

​ஒருபுறம் ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிர்வாகி தூக்கப்பட்ட நிலையில், மறுபுறம் அமைச்சர் பதவி மாற்றம் ? குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பது த.வெ.க. மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் முதல்வர் ஜோசப் விஜய் தலைமை எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதில் அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது!