சென்னை-செய்யாறு நான்கு வழிச்சாலை டெண்டர் ரத்து: அரசு விளக்கம்!

சென்னை:

சென்னை மற்றும் செய்யாறு தொழிற்பகுதியை நேரடியாக இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த 43 கிலோமீட்டர் நீளத்திலான நான்கு வழிச்சாலை அமைக்கும் டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது.

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிப்காட், சிட்கோ உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு சிப்காட் வளாகத்தைச் சுற்றியும் புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருவதால், அப்பகுதியில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

இருப்பினும், சென்னையில் இருந்து செய்யாறு சிப்காட் பகுதிக்கு கனரக வாகனங்கள் எளிதாகச் செல்ல போதிய அகலமான சாலை வசதி இல்லாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். காஞ்சிபுரம் நகரம், தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாலும் பயணம் தாமதமடைந்து வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில், சிங்கப்பெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் தொடங்கி செய்யாறு சிப்காட் வரை சுமார் 43.2 கி.மீ நீளத்திற்கு, 60 மீட்டர் அகலத்தில் நவீன நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 33 கிராமங்களில் மொத்தம் 619 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது.

இந்த சாலை அமைக்கப்பட்டால் கனரக வாகன போக்குவரத்து எளிதாகும் எனவும், தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed