அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நாகர்கோவில் மற்றும் சென்னை புழல் சிறைகளில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைதிகளின் மரணங்களை முன்னிட்டு, தமிழக தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். லாக்-அப் மற்றும் சிறைச்சாலை மரணங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சமாதானப்படுத்த முயற்சிப்பது ஏற்க முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர், சிறைக் காவலர்களின் தாக்குதலே மரணத்திற்கு காரணம் என குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அரசின் அமைச்சர்கள் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் வழங்க முன்வந்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் அதனை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சென்னை புழல் சிறையிலும் விசாரணைக் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உறவினர்களும் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இச்சம்பவங்களிலும் அரசு பாதிக்கப்பட்டவர்களை பணத்தின் மூலம் சமாதானப்படுத்த முயல்கிறது என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள், என்கவுன்டர் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததாக நினைவூட்டிய அவர், மாற்றத்தை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, அதே நிலையைத் தொடர்வதாக விமர்சித்தார். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“உயிருக்கு பணம் மதிப்பாகாது. உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதால் மட்டும் நீதி கிடைக்காது. சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லாக்-அப் மரணங்கள், சிறைச்சாலை மரணங்கள் மற்றும் தேவையற்ற என்கவுன்டர் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், கரூரில் முதல்வரின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியதையே சாதனையாகக் காட்ட முடியாது என்றும், மக்களின் உயிர் பாதுகாப்பே அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆட்சியில் அமர்ந்தவர்கள் திரைப்பட வசனங்களைப் போல அல்லாமல், மக்களின் உயிருக்கும் உரிமைகளுக்கும் பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காத வகையில் அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். காவல் மற்றும் சிறைச்சாலை மரணங்கள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

More Stories
“20 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தபோதும் நான் நினைத்த பல விஷயங்களைச் சாதிக்க முடியவில்லை-திருமாவளவன்
“அமைச்சர் பதவிக்காக தவெகவுக்கு சென்றோருக்கு விஜய் கொடுத்தது அல்வா” – பழனிசாமி…
“முதலமைச்சர் விஜய் சர்வாதிகாரப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும்…” – டிடிவி தினகரன்