அதிமுக எம்.எல்.ஏ.க்களை களவாடிய ‘களவாணி’ விஜய்: டி.டி.வி.தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

மதுரை: “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்னமும் சினிமா நடிகராகவே இருக்கிறார். அவரது பேச்சில் அகங்காரமும், ஆணவமும் மட்டுமே தெரிகிறது” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழல் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்து பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

சினிமா கவர்ச்சியால் வந்தவர் விஜய்: விஜய் ஏதோ சினிமா கிளைமாக்ஸில் பேசுவது போலப் பேசிக்கொண்டிருக்கிறார். ‘அற்பனுக்கு வாழ்வு வந்துவிட்டால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான்’ என்பது போல நடந்து கொள்ளக் கூடாது. சிலருக்கு சில நேரங்களில் குருட்டு அதிர்ஷ்டம் வந்துவிடுகிறது. சினிமா கவர்ச்சியை வைத்துக்கொண்டுதான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார். சினிமா நடிகர் இல்லையென்றால் விஜய்யை யாருக்குத் தெரியும்?

எம்.எல்.ஏ.க்களை திருடிய களவாணி: விஜய்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட தனக்கு ஆதரவளித்த கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, தன் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுக்க ஏதோ ஒரு வகையில் குதிரை பேரம் பேசியுள்ளார்கள். மாற்றுக் கட்சியில் வென்றவர்களைத் தன் கட்சியில் சேர்ப்பதும் ஒரு வகை ஊழல்தான். தவெக என்பது தூய சக்தி அல்ல; அது தமிழ்நாட்டை அழிக்க வந்த ஒரு நாசகார சக்தி.

திமுக மற்றும் அதிமுகவை ‘கூட்டுக் களவாணிகள்’ என்று விஜய் கூறுவது ஒரு முதலமைச்சர் நாற்காலியை நோக்கிப் பயணிப்பவர் பேசும் பேச்சா? உண்மையில் ஆடு திருடன், மாடு திருடன் போல அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்களைக் களவாடிய எம்.எல்.ஏ. திருடர் விஜய்தான். அவர்தான் உண்மையான களவாணி. எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்.

விஜயகாந்துடன் ஒப்பிடாதீர்கள்: விஜய்யை எக்காரணம் கொண்டும் மறைந்த கேப்டன் விஜயகாந்துடன் ஒப்பிடாதீர்கள். விஜயகாந்த் நிஜ வாழ்க்கையில் நடிக்க மாட்டார், சினிமாவில் மட்டும்தான் நடிப்பார். ஆனால் விஜய் அப்படியல்ல.

பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவும் தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறுகிறார். அப்படியென்றால், அரசியல் சூழலின் அடிப்படையில் திமுகவும் அதிமுகவும் கூட கூட்டணி அமைக்கலாம். ரீல் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ரீல் விட்டே ஆட்சியைத் தொடரலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.