சென்னை புழல் தண்டனை சிறையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி காளிமுத்து (எ) வெள்ளை காளி (35) கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு 2024ம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். இந்த தண்டனை சிறையில் உள்ள சென்னை எர்ணாவூரை சேர்ந்த ரகுமான் (31), ஓட்டேரியை சேர்ந்த அஜய் (23), திருச்சியை சேர்ந்த சீவலபெரியான் (33), தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (எ) லாலி மணிகண்டன் (35) ஆகியோரிடம் வழக்கறிஞர் ஒருவர் மனு பார்க்க வரும்போது, வெள்ளைக்காளியை சிறையில் கொலை செய்து விடுங்கள், ரூ.1 கோடி தருவதாக லாலி மணிகண்டனிடம் தெரிவித்ததாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், ரகுமான் திருச்சி சிறைக்கும், அஜய், சீவலபெரியான் கடலூர் சிறைக்கும், லாலி மணிகண்டன் சேலம் சிறைக்கும் காலை புழல் சிறையில் இருந்து மாற்றப்பட்டனர். இதனால் சிறையில் நடைபெற இருந்த வெள்ளை காளி கொலை, உளவுத்துறையினால் தடுக்கப்பட்டதால் சிறை அதிகாரி மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் லாலி மணிகண்டனிடம் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை செய்தபோது, செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் யார் யாருடன் பேசிக் கொண்டிருந்தார், எதற்காக பேசினார், இந்த செல்போனை கொடுத்தவர்கள் யார், எப்படி வந்தது என்ற பல்வேறு கோணங்களில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
சென்னை : வாடிக்கையாளர் போல் நடித்து ரூ.53 லட்சம் நகை திருட்டு: 20 முறை கடையில் கைவரிசை:
தென் மாநிலங்களை தண்டிப்பதா? – உணவு பாதுகாப்புச் சட்ட திருத்தத்துக்கு முதல்வர் விஜய் எதிர்ப்பு…
சென்னை: டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு; டிடிஆர்- பெண் வக்கீல் மாறிமாறி தாக்குதல்: