“கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்… திமுகவை கேள்வி கேட்க அருகதை இல்லை” – திமுக பரந்தாமன்…

தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வழக்கறிஞர் இ.பரந்தாமன், “கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிப்பட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தாமன் கூறியதாவது; “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியிலே திமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற தவெக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத்தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. இது பொய்யான வழக்கு இந்த வழக்கில் இவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டிய முகாந்தரம் இல்லை என்ற அடிப்படையில் நேற்றைக்கு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததன் மூலம், முதல் முறையாக இந்த குதிரைபேர சர்க்கார் மூக்கறுக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத தவெக அரசு தினந்தோறும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில்தான் அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஒரு அவதூறு வழக்கு. அவதூறு வழக்கு போடுவதில் கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது. முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக அவசர அவசரமாக ஓடி வந்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்வதனுடைய பின்னணி என்ன? எதற்கு ஒரு அவதூறு வழக்கில் கைது செய்தவரை 6 மணி நேரம் 7 மணி நேரம் காவல்துறை விசாரணை செய்தது? அது என்ன மர்மம்?

அந்த விசாரணையின் போது அனிதா ராதாகிருஷ்ணனை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள் தவெக வில் இணைய பணம் தருகிறோம்” என கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டு. 6 மணி நேர விசாரணை இதற்காக தான் நடந்துள்ளதா?

பாஜக எப்படி ED யை விட்டு மிரட்டி கட்சியில் சேர்க்கிறார்களோ அதேபோல தான் காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை தவெக அரசு செய்கிறது. இந்த உண்மை வெளிப்பட்ட உடன் பதறிப்போய் நேற்று இரவு 9 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஒரு பேட்டி கொடுக்கிறார். பேட்டியில் முறையான விளக்கம் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவர் என்ன சொல்கிறார் தனி நபர் அவதூறு செய்கிறார். உடல் கேலி செய்கிறார். எங்களின் எம்.எல்.ஏ வை ரௌடி என கூறுகிறார். இப்படி எல்லாம் சொல்லும் நிர்மல் குமார் மீது உக்கரபாண்டியன் என்பவர் உசிலம்பட்டியில் நில மோசடி செய்தார் நிர்மல் குமார் என 420 புகார் கொடுத்துள்ளார். இந்த 420 நிர்மல் குமார் வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து ரவுடி என்றெல்லாம் சொல்ல எந்த அருகதையும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு மக்களை கொன்று குவித்த கட்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொன்று குவித்தவர் என்று எங்க தலைவருடைய பெயரை சொல்றார். இது எந்த விதத்தில் நியாயம்? இப்படி அவதூறாக பேசக்கூடிய இந்த ஆதவ் அர்ஜுனா ஏன் கைது பண்ணாமல் இன்னும் வேடிக்கை பார்த்திட்டு இருக்கிறது காவல்துறை.

யாரை ரவுடின்னு சொல்றாரு நிர்மல் குமார், நிதித்துறை அமைச்சராக இருக்கிறாரே மரிய வில்சன் அவர் மீது வீடு புகுந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வழக்கு உள்ளது. அந்த வழக்கு தொடர்பாக இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் அவரை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மினிஸ்டர் மேல பவுடர் குற்றச்சாட்டு இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மேல பாதிக்கப்பட்ட பெண் அளித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அமைச்சர் நிர்மல் குமார் மீது 420 புகார் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய விஜய் மீது குதிரைபேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறோம். இப்படி கிரிமினல் பின்னணி கொண்ட கேபினட்டாக, குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்டாக தவெக அமைச்சரவை இருக்கிறது. இப்படிப்பட்ட தவெக அரசாங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து கேள்வி கேட்பதற்கு துளியும் அருகதை இல்லை.

நேற்றைக்கு அதிமுகாவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், ‘விஜய பாஸ்கர் அமைச்சர் பதவி வாங்கித்தருவதாக பேரம் பேசினார்’ என கூறி இருக்கிறார். யார் இந்த குதிரை பேரத்தை செய்து கொண்டு உள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

திராவிட முன்னேற்றக் கழகம் வென்று இருக்கிறது 59 இடங்கள். ஒரு எம்எல்ஏ, இரண்டு எம்எல்ஏ வை விலைக்கு வாங்கி எப்படி ஆட்சி அமைக்க முடியும் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசுவது வடிகட்டியே பொய். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்த வேண்டிய நோக்கத்திற்காக மட்டுமே கூறப்படும் குற்றச்சாட்டு.