பாரிமுனை பிரகாசம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அங்கித் திலீப் மோர் (26). இவர் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கும் கடை நடத்தி வருகிறார். மேலும் தங்க நகைகளின் தரத்தை ஆய்வு செய்யும் வேலையும் செய்கிறார். அவர் நேற்று இரவு கடையில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு திடீரென முகமூடி அணிந்து வந்த 3 பேர், அங்கித்தை தாக்கி கடையிலிருந்த ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியோடினர். அப்போது அங்கித், பக்கத்து கடையில் இருந்த சிலர் உதவியுடன் தப்பி ஓடிக் கொண்டிருந்த 3 பேரையும் விரட்டினார். இதில் ஒருவரை மட்டும் பிடித்தார்.
மற்ற இருவரும் நகைகளுடன் தப்பினர். பிடிபட்ட நபர் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர், யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற அருண் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அருணை கைது செய்தனர்.
விசாரணையில் அருணுடன் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (23), ஹேராம் என்ற ரமணா (24) என்பதும், அவர்கள் வண்ணாரப்பேட்டை பழைய கல்லறைச் சாலையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸார், லோகேஷையும், ரமணாவையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டன.

More Stories
புதுச்சேரி: சிறுவர்களின் பெற்றோர் மீது FIR… போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை…
மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பஸ்சில் பாலியல் தொல்லை: ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது…
“அனிதா ராதாகிருஷ்ணன் தவமிருந்தாலும் தவெகவில் சேர்க்கமாட்டோம்…” அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்…