திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ திரையிடலுக்கு கடைசி நேரத்தில் தடை.. சென்னையில் வெடித்த சர்ச்சை!

சென்னையில் இன்று (ஜூன் 30) மாலை நடைபெறவிருந்த திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற ஆவணப்படத்தின் சிறப்புக் காட்சி மற்றும் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசின் இந்த நடவடிக்கை குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றத்தில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் தான் அங்குப் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்தையும், அதன் சமகால அரசியல் நிழல்களையும் பிரதிபலிக்கும் வகையில் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” (Thiruparankundram Files) என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இயக்குநர்கள் தவம் மற்றும் தமிழ்தாசன் ஆகியோரின் கூட்டு இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம், ஏற்கனவே யூடியூப் தளத்தில் வெளியாகிப் பலராலும் பார்க்கப்பட்ட ஒன்றாகும். தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்னலிஸ்ட் யூனியன் அமைப்பின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் இந்த ஆவண படத்தைத் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த முக்கிய விருந்தினர்களான தமிமுன் அன்சாரி, கருணாஸ், நடிகர் சத்யராஜ், சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். இருப்பினும், இந்த ஆவணப்படத்தைத் திரையிடக் கூடாது என இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளின் பிரஷர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அனுமதி மறுப்பு இந்தச் சூழலில் தான் அந்த தியேட்டர் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இறுதி நேரத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி, இந்தத் திரையிடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கருத்துச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரையாடல்களையும் முன்னெடுக்க வேண்டிய விஜய் அரசு, ஒரு சில அமைப்புகளின் மிரட்டல்களுக்கு பணிந்து, மதநல்லிணக்கத்தை பேசும் ஒரு ஆவணப்படத்தின் திரையிடலை நிறுத்தியிருப்பதாகப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களில் வெளிப்படையாகக் கிடைக்கக்கூடிய ஒரு படைப்பை, முன்கூட்டியே அனுமதி பெற்று நடத்தவிருந்த திரையிடல் நிகழ்ச்சிக்குத் தடை விதிப்பது தேவையற்றது என்றும் பலரும் விமர்சிக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்ற போதிலும், மிரட்டல்களுக்குப் பயந்து முற்போக்கு மற்றும் ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக நெட்டிசன்களும் விமர்சித்து வருகிறார்கள். வரும் நாட்களில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்றே தெரிகிறது. திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் கார்த்திகை தீபம் ஏற்றுவது மற்றும் தர்கா தொடர்பான நீதிமன்ற வழக்குகளை வைத்து ஆரம்பிக்கும் இந்த ஆவண படத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக உள்ளூர் மக்கலின் நேர்காணல்கள், சங்க காலத்தில் சமணர்கள் வாழ்ந்த, பிற்காலத்தில் நாயக்க மன்னர்கள் மற்றும் சுல்தான்களின் கட்டுப்பாட்டிற்குப் போன இந்த மலையின் குறிப்புகள் என்று பல தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இந்த ஆவண படத்தை தவம் மற்றும் தமிழ்தாசன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். மேலும், ஏற்கனவே இந்த படம் யூடியூபில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது