“அமைச்சர் சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என திமுக மாணவரணி தெரிவித்துள்ளது.
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை.
குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது.
அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு – 4 முனை போட்டி தீவிரம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் புறப்படுகிறார் முதல்வர் விஜய்: பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டுப் பயணம்!
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!