பல மாநிலங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டிய கள்ளக்காதல் ஜோடி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசா மாநிலம் மாலன்கிரி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். வீடு அருகே நகைக்கடை இருப்பதால் இரவு நேரங்களில் நகையை வீட்டில் கொண்டு வந்து லாக்கரில் வைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஆந்திராவை சேர்ந்த மரசு ஜான்பால் (21), இன்தூரி அர்ச்சனா (39) ஆகியோர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். கணவன் மனைவி என்று கூறிக் கொண்ட இருவரும் சுபாஷ் பிரசாத் பாட்டிலுடன் நட்புடன் பழகி வந்துள்ளனர். இதனால் 2 பேரும் அடிக்கடி சுபாஷின் வீட்டிற்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் ஒருநாள் லட்டில் மயக்க மருந்து கலந்து சுபாஷுக்கு கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் அவர் மயங்கியதும், காஸ் கட்டர் மூலம் வீட்டில் இருந்த லாக்கரை உடைத்து முக்கால் கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஒடிசா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் மரசு ஜான்பால், இன்தூரி அர்ச்சனா ஆகியோருக்கு ஏற்கனவே வேறு நபருடன் திருமணமாகி தற்போது அவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக சுற்றியது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கு சென்று அங்கு பெண்கள் இல்லாமல் தனியாக வாழும் பணக்கார நபர்களின் வீட்டை நோட்டமிட்டு பக்கத்தில் வாடகைக்கு குடியேறி நன்கு பழகிய பின்னர் இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையின் தான் கள்ளக்காதல் ஜோடி நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வருவது ஒடிசா போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஒடிசா போலீசார் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் அதிரடியாக கள்ளக்காதல் ஜோடி வேலை பார்த்த ஓட்டலுக்கு சென்று இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர் மரசு ஜான்பால், அர்ச்சனா ஆகியோர் கொள்ளையடித்த நகை, பணத்தை ஆந்திராவில் முதலீடு செய்துள்ளதால் அவற்றை மீட்க ஒடிசா போலீசார் இருவரையும் ஆந்திர மாநிலத்துக்கு அழைத்து சென்றனர்.

More Stories
சேலம் நிலத்தகராறு :விவசாயி வெட்டிக்கொலை : சகோதரர்கள் கைது…
ரெய்டு வர்றவங்களை மந்திரி ஆக்கும் ஈனக் காரியத்தை தி.மு.க செய்யாது’: ஆர்.எஸ் பாரதி ஆவேசம்
பெங்களூருவில் நடிகை வீட்டில் பிணமாக கிடந்த நபர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..