புதுக்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் கைது:

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அதே பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆமோஸ் தேவசகாயம் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு வயது 52. இவர் மதுரையை சேர்ந்தவர். தற்பொழுது அவர் புதுக்கோட்டை கணேஷ் நகர் ஒன்றாம் வீதியில் வசித்து வருகிறார்.

ஆமோஸ் தேவசகாயம் தனது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வழக்கு பதிவான உடனேயே, புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட சில மாணவர்களை அழைத்துக்கொண்டு உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம் சென்றுள்ளார். போட்டி முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது தோழியான சக மாணவியையும் காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவியை காரில் முன் சீட்டில் அமர வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனை காரில் பின் சீட்டில் அமர்ந்திருந்த பாதிக்கப்பட்ட மாணவியின் தோழி பார்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அங்கு உள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இது குறித்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ராமபிரியா புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியரை போக்சோவில் கைது செய்து நடவடிக்கை‌ மேற்கொண்டனர். 

பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர் இதற்கு முன்னரும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது பற்றி தெரிந்துகொள்ளவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம்  பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.