வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத். அவர் திருவிழாக்களில் பொழுதுபோக்கு ராட்டினம் அமைக்கும் தொழிலை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 16ஆம் தேதி இரவு, அவர் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் திருவிழாவிற்காக ராட்டினம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து வீடு திரும்ப மீண்டும் புதுக்கோவில் செல்ல அவர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தை அடைந்து பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது வாணியம்பாடி கட்டைமேடு பகுதியை சேர்ந்த சதாம் உசைன் மற்றும் கொல்லத்தெரு பகுதியை சேர்ந்த லோகேஷ் ஆகிய இருவரும் அந்தப்பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்தனர். சரத்தை பார்த்த அவர்கள் அவருக்கு லிப்ட் அளிப்பதாக கூறி, தங்கள் பைக்கில் ஏறுமாறு அழைத்துள்ளனர்.
அவர்களுடன் பைக்கில் ஏற சரத் சற்று தயங்கியுள்ளார். இந்த நிலையில், சரத்தை அவர்கள் வலுக்காட்டாயமாக தங்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளனர். பின், செட்டியப்பனூர் சுடுகாடு அருகே வண்டியை நிறுத்தி சரத்தை இருவரும் மிரட்டி அவரிடம் இருந்த செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிய சரத், பின்னர் தன்னை சமாளித்துக்கொண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது சதாம் உனைன் மற்றும் அவரது கூட்டாளி லோகேஷ் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து சரத்திடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!